ஒரு மில்லியன் ரூபா செலவில் உப்புக்கேணி குளத்திற்கு பாதுகாப்பு வேலி..! சாவகச்சேரி நகரசபை தவிசாளர் ஸ்ரீபிரகாஸ்



சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட உப்புக்கேணிக் குளத்திற்கு பாதுகாப்பு வேலி அமைக்க ஒரு மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பாதுகாப்பு வேலி அமைக்கப்படும் என சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் வ.ஸ்ரீபிரகாஷ் தெரிவித்துள்ளார்.

29/08/2025 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்படி விடயத்தைத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

கோவிற்குடியிருப்புக் கிராமத்தின் தரை வட்டாரத்தில் உள்ள பழமை வாய்ந்த உப்புக்கேணிக் குளம் கடந்த காலத்தில் வெள்ள நீரைத் தேக்கி அதன் பின் மேலதிக நீரை இயற்கையாகவே குடா கடலுக்குள் செலுத்தும் தன்மை கொண்டதாக காணப்பட்டது.
இருப்பினும் அண்மைக்காலமாக அமைக்கப்படுகின்ற கட்டடங்கள்,வீதி அபிவிருத்தி போன்ற செயற்பாடுகளால் கடலுக்கு சென்றடையும் நீரோட்ட வழி தடைப்பட்டு தீவிர மழை காலத்தில் அப்பகுதி மக்கள் வெள்ள அனர்த்தத்தை சந்திக்க நேர்கின்றது.
இந்நிலையிலேயே சாவகச்சேரி நகரசபையின் முதலாவது அமர்வின் போது வட்டார உறுப்பினர் பிரணவராசா குளத்தினை தூர் வார வேண்டும் என்ற விடயத்தை சபையின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
அதன்பின்னர் அண்மையில் சபை நிதியில் இருந்து குளம் தூர்வாரப்பட்டது.இதனூடாக அதிகளவு நீரை கொள்ளச் செய்து வெள்ள அனர்த்ததை குறைக்க முடிவதுடன்-நிலத்தடி நீரையும் பாதுகாக்க முடியும் என எதிர்பார்க்கின்றோம்.
குளத்தினை ஆழப்படுத்தி இருப்பதனாலும்-குளமானது வீதியோரம் காணப்படுவதனாலும் குளத்தின் இரு பக்கங்களுக்கு பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என பொது அமைப்புக்களாலும்-சபை உறுப்பினர்களாலும் எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் உடனடியாக ஒரு மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்து இரு பக்கங்களுக்கு பாதுகாப்பு வேலி அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்காலத்தில் அரசாங்க மற்றும் மாகாண நிதி ஒதுக்கங்கள் ஊடாக உரிய திணைக்களங்களின் ஆலோசனைகளுடன் குளத்திற்கான நிரந்தர வடிகாலமைப்பை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.நிரந்தர வடிகாலமைப்பை ஏற்படுத்த ஆறு கோடி ரூபாய் வரை தேவைப்படும் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த செய்தியை பகிரவும்

கருத்துரையிடுக

புதியது பழையவை