
சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட கச்சாய் வீதி பகுதியில் அமைந்துள்ள உப்புக்கேணி குளம் மழைகாலங்களில் அதிக அளவு நீர்வரத்து காரணமாக ஏறத்தாழ 4அடி முதல் 6அடி வரை வெள்ளநீர் தேங்குவதால் அந்தப் பகுதியில் வசிக்கும் ஏறத்தாழ 150க்கு மேற்பட்ட மக்கள் வெள்ள இடர்காலத்தில் தமது வீடுகளில் இருந்து வெளியேறி வேறு எங்காவது தங்கவேண்டிய அவலநிலை தொடர்ந்து வருகின்றது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களும், தென்மராட்சி அபிவிருத்திக்கழகமும், எடுத்துக்கொண்ட முயற்சியின் காரணமாக தற்போது முதற்கட்டமாக சாவகச்சேரி நகர சபையினரால் குளம் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதற்காக கடந்த பாதீட்டில் ஒதுக்கப்படும் என செயலாளரால் கூறப்பட்ட 7 மில்லியன்கள் பின்னர் ஒதுக்கப்படவில்லை என கூறி வாய்க்கால் அமைப்புக்கள், பாதுகாப்பு வேலிகள் உருவாக்கப்படவில்லை.
உப்புக்கேணிக் குளத்திற்கு உடனடியாக நகரசபையினரால் பாதுகாப்புச் சுவர் அல்லது இரும்பிலான வேலி அமைக்கப்பட வேண்டும் என கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கமானது நகரசபையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. அதேவேளை கோவில்குடியிருப்பு வட்டார உறுப்பினர் திருமதி சுபோதினி அவர்கள் வாய்க்கால்கள் உடனடியாக அமைக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.
கோவிற்குடியிருப்பு-உப்புக்கேணிச் சூழல் அடிக்கடி வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதியாக காணப்படுவதனால் நகரசபை குளத்தினை ஆழப்படுத்தி நீரின் கொள்ளளவை அதிகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தது.
இருப்பினும் நீண்ட காலமாக உப்புக்கேணிக் குளமும் அதனோடு இணைந்த வீதியும் புனரமைப்புச் செய்யப்படாமையால் வீதியின் பெரும் பகுதியை குளம் ஆக்கிரமித்து விட்ட நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் மாரி காலத்திலும்-இரவு வேளைகளிலும் உப்புக்கேணி வீதி ஊடாக பயணிப்போர் தவறுதலாக குளத்திற்குள் விழக்கூடிய அபாய நிலை இருப்பதனால் உடனடியாக மாரி காலத்திற்கு முன்பாக குளத்தின் இரு கரைப் பகுதிகளுக்கு பாதுகாப்பு சுவர் அல்லது வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்-குள அபிவிருத்தி மற்றும் வாய்க்கால் அமைப்பிற்கென நகரசபையின் 2025ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 7மில்லியன் ரூபாய் நிதியை இந்த தேவைப்படுகளுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இப்பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மேற்படி குளம் ஆழப்படுத்தப்பட்டு மேலதிக நீர் வெளியேறும் வகையில் வாய்க்கால்கள் அமைக்கப்படல் வேண்டும் என 13/12/24 யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் Gajendrakumar Ponnambalam அவர்கள் தெரிவித்திருந்தார்.
