சாவகச்சேரி நகர சபை சார்பிலான அறிவித்தல்
ஒரு ஹெக்டயருக்கு மேல் காணி உபபிரிவிடல் செய்தல் - திறந்த வெளிக்காக 10% காணி ஒதுக்கீடு செய்தல் தொடர்பான சட்ட அறிவுறுத்தல் - ஒழுங்குவிதி 23 (2021.07.08 அதி விசேட வர்த்தமானி இல. 2235/54)
தாங்கள் சாவகச்சேரி நகரப்பகுதியில் தனங்கிளப்பு வீதியில் அமைந்துள்ள ஏறத்தாழ 5 Hectare பரப்பளவிலான ஆதனத்தை உபபிரிவிடல் செய்து விற்பனை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள் என்றும், அதற்கான கொள்வனவாளர்களையும் முற்பணத்துடன் பதிவு செய்துள்ளீர்கள் என்றும் எனது கட்சிக்காரர் எனக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 2021.07.08 திகதிய அதி விசேட வர்த்தமானி - பகுதி 1, பிரிவு (I), ஒழுங்குவிதி 23 (1) இன் பிரகாரம், “உட்பிரிவிடல் செய்யப்படும் காணி 1.0 ஹெக்டயர் அல்லது அதற்கு மேல் இருப்பின், வீதிகள் மற்றும் வடிகால்களை தவிர்த்து மீதமுள்ள காணியில் 10% க்கு குறையாத பகுதியை சமூக, பொழுதுபோக்கு மற்றும் திறந்த வெளி பயன்பாட்டிற்காக ஒதுக்க வேண்டும்.” என்பது சட்டத்தின் தேவைப்பாடாகும்.
மேலும் அவ்வாறு ஒதுக்கப்படும் காணி, ஒழுங்குவிதி 23 (2) இன் படி படிவம் B (Form B) இல் சம்பந்தப்பட்ட அதிகார சபைக்கு (சாவகச்சேரி நகர சபைக்கு) இலவசமாக அன்பளிப்பாக வழங்கப்பட வேண்டும். மேலும் 23(3) இன் படி அது பயன்படுத்த முடியாத துண்டுகளாக இல்லாமல், ஒவ்வொரு உட்பிரிவு காணியில் இருந்தும் இலகுவாக அணுகக்கூடிய இடத்தில் அமைய வேண்டும்.
இருந்த போதிலும் தாங்கள் இதுவரை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உப பிரிவிடுகைக்கான விண்ணப்பம் சமர்ப்பித்திருக்கவில்லை என்றும், முறைப்படி உபபிரிவிடல் அனுமதிக்கப்படாத சூழ்நிலையில் தாங்கள் குறித்த ஆதனத்தை தன்னிச்சையாக நில அளவை செய்து துண்டுகளாக்கி வெகு விரைவில் விற்பனை செய்வதற்கு தாங்கள் தயாராகியுள்ளீர்கள்.
ஆகையால் தாங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உபபிரிவிடல் விண்ணப்பம் செய்து மேற்குறித்த ஒழுங்குவிதியில் சொல்லப்பட்டவாறாக (23 (2) இன் படி படிவம் B (Form B)) சாவகச்சேரி நகர சபைக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் ஆதனப்பகுதிக்கான உறுதிமொழி ஆவணத்தை தயார் செய்து வழங்குமாறும் தங்களுக்கு அறிவித்தல் விடப்படுகின்றது. ஆகையால் தங்களால் தயாரிக்கப்பட்ட நில அளவைப்படத்தில் துண்டு 1 என்று சுட்டப்பட்ட பகுதிக்கான விற்பனையை இடைநிறுத்துமாறும் மேற்படி விடயம் தொடர்பாக உடனடியாக நகர சபை தவிசாளரைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றீர்.
தவறும் பட்சத்தில், நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டம் மற்றும் நகர சபை கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்படுகின்றீர்.


