சாவகச்சேரி மற்றும் சரசாலை சித்த மத்திய மருந்தகங்களினால் வழங்கப்பட்டு வந்த ஆயுள்வேத மருத்துவ சேவைகள் நீண்டகாலமாக நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் இருந்தபோதிலும், அவர்கள் இருவரும் கொடிகாமம் கிராமிய சித்த வைத்தியசாலையுடன் இணைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், மருந்தாளர் மற்றும் உதவியாளர் ஆளணியினர் காட்டப்பட்டிருந்த போதிலும், நேற்றைய (03.06.2026) அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் DCC உரிய திணைக்களத்தினரால் “ஆளணியினர் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இவ்விரு மருந்தகங்களிலும் இருந்த ஆளணியினர் எங்கு இப்போது கடமையாற்றுகின்றனர்.
மிகவும் கவலைக்கிடமான விடயம் என்னவெனில், கிட்டத்தட்ட 6 வருடங்களாக இந்த சேவை இயங்கவில்லை என கூறப்படும் நிலையில், இதைச் சரிசெய்ய வேண்டியவர்கள் தொடர்ந்து பாராமுகமாக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
வறிய மக்கள், வயோதிபர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பலர் இவ்வாறான வைத்திய சேவைகளைப் பெற உரிமையுடையவர்கள். ஆகவே, இந்த சேவை நீண்டகாலமாக நிறுத்தப்பட்டிருப்பது ஒரு அடிப்படை சுகாதார உரிமை மீறலாகவே பார்க்கப்பட வேண்டும்.
2020 ஆம் ஆண்டிலேயே ஆளணியை மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டாலும், அதற்கு இன்னமும் அனுமதி கிடைக்கவில்லை. மேலும் இது சில கேள்விகளை எழுப்புகிறது. இவ் இரு நிலையங்களையும் மூடுவதற்கு யார் முடிவு செய்தது, மக்களிடம் அபிப்பிராயம் பெறப்பட்டதா?
ஒரு அடிப்படை சுகாதார சேவை பல ஆண்டுகளாக இயங்காமல் இருப்பதற்கான பொறுப்பு யார் கூறுவது?
மக்கள் கேட்பது ஒன்றே —
இயங்க வேண்டிய சேவை, இயங்க வேண்டும்.
தென்மராட்சிப் பகுதியில் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ நிறுவனங்களின் நிர்வாக அமைப்பு
சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ சேவைகள் அனைத்தும் ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்குவதில்லை. அவை மத்திய அரசு, மாகாண அரசு மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியவற்றின் கீழ் தனித்தனியாக நிர்வகிக்கப்படுகின்றன.
மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கைத்தடி சித்த போதனா வைத்தியசாலை (Siddha Teaching Hospital, Kaithady)
வட மாகாண சுகாதார அமைச்சு / வட மாகாண ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் கொடிகாமம் கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலை.
சாவகச்சேரி மத்திய ஆயுர்வேத மருந்தகம், சரசாலை மத்திய ஆயுர்வேத மருந்தகம் என்பன இயங்குகின்றன.
இலவச ஆயுர்வேத மருந்தகங்கள் (FADs) சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றன. சாவகச்சேரி பிரதேச சபையின் கீழ் இயங்கும் இலவச ஆயுர்வேத மருந்தகங்களாக:
* வரணி
* மிருசுவில்
* கச்சாய் என்பன காணப்படுகின்றன.
இந்த நிர்வாக அமைப்பைத் தெளிவாக அறிந்திருப்பது, பொதுமக்களுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகும்.
மேலும் மத்திய ஆயுர்வேத மருந்தகங்களுக்கான ஆளணிகள் உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை தங்களது சொந்தக் கட்டடங்களில் இயங்கக்கூடிய வசதிகள் இதுவரை தென்மராட்சியில் ஏற்படுத்தப்படவில்லை. ஆனாலும் குறிப்பாக, சரசாலை மத்திய ஆயுர்வேத மருந்தகம், நீண்டகாலமாக சரசாலை பிரதேச சபையின் உப அலுவலகக் கட்டடத்தில் இயங்கி வந்துள்ளது.
மேலும், கொடிகாமம் கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலை 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டபோது, மத்திய ஆயுர்வேத மருந்தகத்தில் சேவையாற்றிய வைத்தியர்கள் வட மாகாண ஆயுர்வேத திணைக்களத்தின் மூலம் இணைக்கப்பட்டனர். பின்னர், கொடிகாம வைத்தியசாலைக்சென நிரந்தர ஆளணி (Cadre) உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான ஆளணி (Cadre) விபரங்களின்படி, தென்மராட்சி பகுதியில் இயங்கும் ஆயுர்வேத மருத்துவ நிறுவனங்களுக்கான ஆளணி பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது.
கொடிகாமம் கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலை
பொறுப்பு வைத்தியர் ஒருவர் உட்பட மொத்தம் 03 ஆளணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சாவகச்சேரி மத்திய ஆயுர்வேத மருந்தகம்
01 ஆளணி ஒதுக்கப்பட்டுள்ளது.
சரசாலை மத்திய ஆயுர்வேத மருந்தகம்
01 ஆளணி ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது, சாவகச்சேரி மற்றும் சரசாலை மத்திய ஆயுர்வேத மருந்தகங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வைத்தியர்கள் இருவரும், கொடிகாமம் கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலையிலேயே கடமையாற்றி வருகின்றனர்.


