கொடிகாமம் கிராமிய சித்த வைத்தியசாலை: கட்டண விடுதி மூடப்படவேண்டுமா?


கொடிகாமம் கிராமிய சித்த வைத்தியசாலையில் இயங்கும் கட்டண விடுதியை மூடுவது தொடர்பில் 13.10.2026 அன்று நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தீர்மானம், மீளாய்வு செய்யப்பட வேண்டியதாகும். இலவச மருத்துவ சேவை மறுக்கப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்திருந்தால், அவை உரிய முறையில் விசாரிக்கப்பட வேண்டும். அதேவேளை, முறைப்பாடுகளின் உண்மைத்தன்மையையும் சேவையின் நிர்வாக ஏற்பாடுகளையும் ஆராயாமல், வழங்கப்பட்டுவரும் சேவையை உடனடியாக நிறுத்துவது பொருத்தமான அணுகுமுறையாகாது.

கொடிகாமம் கிராமிய சித்த வைத்தியசாலை / சித்த விசேட சிகிச்சை நிலையம், மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்டு, 2021 ஜூலை 15 அன்று அப்போதைய வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர், சித்த வைத்திய மாகாண ஆணையாளர், பிரதி மாகாண ஆணையாளர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து, இவ்வைத்தியசாலை தனது மருத்துவ சேவைகளை ஆரம்பித்தது. தொடர்ந்து தற்கு 3 வைத்திய ஆளணி உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அச்சுவேலி செல்வநாயகபுரத்தில் சித்த விசேட சிகிச்சைக் கட்டணப் பிரிவும் மருந்து விற்பனை நிலையமும் 2022 ஒக்டோபர் 28 அன்று அப்போதைய வடமாகாண பிரதம செயலாளர் திரு. எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்களால் திறந்து வைக்கப்பட்டன. அன்றைய தினமே கட்டண விடுதியில் முதலாவது நோயாளர் அனுமதிக்கப்பட்டார்.

சுகாதாரம், சுதேச மருத்துவம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் ஒரே மாகாண அமைச்சின் கீழ் இருந்த நிலையில், இப்பிரிவு அச்சுவேலியில் நன்னடத்தைப் பிரிவுக்குரிய கட்டடமொன்றில் இயங்கிவந்தது.

பின்னர், 2025ஆம் ஆண்டு அக்கட்டடத்தை விடுவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால்,  கட்டணப் பிரிவு கொடிகாமம் கிராமிய சித்த வைத்தியசாலை வளாகத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு இந்நோக்கத்திற்காக அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும், இணைந்த மலசலகூட வசதிகளுடனான நான்கு அறைகளைக் கொண்ட கட்டடத்தில், 2026 ஜூன் 18 முதல் கட்டணச் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

கொடிகாமம் கிராமிய சித்த வைத்தியசாலையில் ஏற்கெனவே வழங்கப்பட்டுவந்த இலவச விடுதிச் சேவை தொடர்ந்த நிலையிலேயே, அதற்கு மேலதிகமாகக் கட்டண விடுதிச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலவச உள்நோயாளர் சேவைக்காக 14 கட்டில்கள் உள்ளதாகவும், இலவச வெளிநோயாளர் சேவையும் தொடர்ந்து இயங்கிவருவதாகவும் அறிய முடிகின்றது.

மேலும், இலவச சேவைப் பிரிவுகளும் கட்டணச் சேவைப் பிரிவுகளும் தனித்தனியாக இயங்கிவரும் நிலையில், இலவச சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் போதுமான அளவிலும் உள்ளது. 

இலவச சிகிச்சைக்காக வரும் நோயாளியிடம், “இங்கு கட்டணம் செலுத்த வேண்டும்; இல்லையெனில் கைதடிக்குச் செல்லுங்கள்” எனக் கூறி அனுப்பப்பட்டதாகவும், தலைவர் கூறியிருந்தார். இருப்பினும் அதனை உடனடியாக மூடவேண்டும் என்பது எவ்வாறான அணுகுமுறை. அவ்வாறு அனுப்பப்பட்டிருந்தால், அது கவனமாக விசாரிக்கப்பட வேண்டிய விடயமாகும். அவ்வாறான சம்பவம் நிர்வாக அறிவுறுத்தலின் அடிப்படையில் நடந்ததா, தகவல் தொடர்பில் ஏற்பட்ட குறைபாடா, அல்லது தனிப்பட்ட வைத்தியர் அல்லது ஊழியரின் செயற்பாடா என்பதை விசாரணையின் மூலமே கண்டறிய முடியும்.

இலவச மருத்துவ சேவை மறுக்கப்பட்டதாகக் கிடைக்கும் முறைப்பாடுகளை அலட்சியம் செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட நோயாளிகளின் வாக்குமூலங்கள், நோயாளர் அனுமதிப் பதிவுகள், பணியாளர்களின் விளக்கங்கள் மற்றும் நிர்வாக அறிவுறுத்தல்கள் ஆகியவற்றை ஆராய்ந்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

எனினும், அவ்வாறான விசாரணை நடத்தப்பட்டதா, சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கோரப்பட்டதா, குறைபாடுகள் இருந்திருந்தால் அவற்றைச் சீர்செய்ய உரிய காலக்கெடு வழங்கப்பட்டதா என்பவை தெளிவாகத் தெரியவில்லை. இந்நிலையில், சேவையை உடனடியாக நிறுத்தவும் கட்டண விடுதியை மூடவும் தீர்மானித்திருப்பது மீளாய்வுக்குரியது.

கட்டணப் பிரிவு உரிய அனுமதியுடன் அமைக்கப்பட்டதா எனவினவப்பட்டபோது உரிய திணைக்கள அதிகாரியொருவர் இல்லை எனத் தெரிவித்தார். அவ்வாறெனில், எந்த அனுமதி பெறப்படவில்லை, அதைப் பெற வேண்டிய பொறுப்பு யாருக்குரியது, முன்னர் வழங்கப்பட்ட அனுமதிகள் என்ன என்பவற்றை ஆவணங்களுடன் விளக்க வேண்டும். அல்லது மாகாண சபைக்குரிய அதிகாரம் என்ன என்பது கேள்விக்குறியாகலாம்.

இக்கட்டணச் சேவையை யார் பயன்படுத்துகின்றார்கள், அதன் மூலம் பெறப்படும் பணம் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பவை நியாயமான கேள்விகளாகும்.

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் உறவுகள் இச்சேவையைப் பெருமளவில் பயன்படுத்துகின்றனர். முன்பதிவு செய்து இங்கு வந்து தமக்கான வைத்தியத்தைப் பெறுகிறார்கள். கட்டணச் சேவையின் மூலம் பெறப்படும் வருமானம் மாகாணத் திறைசேரிக் கணக்கில் வைப்பிலிடப்படுவதாகவும், மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டு நடைமுறைகளுக்கமைய மாகாணத்திற்குள் மேற்கொள்ளப்படும் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  லொடரை எதிர்பார்க்கும் நாட்டுக்கு, சுற்றுலாத்துறை வளர்ந்துவரும் நிலையில் மருத்துவ சுற்றுலாத்துறையின் தேவையானது இன்றியமையாது. 

இலவச சித்த மருத்துவ சேவை தடையின்றிக் கிடைப்பது உறுதிசெய்யப்பட வேண்டும். அதேவேளை, உரிய அனுமதிகளுடனும் வெளிப்படையான நிர்வாகத்துடனும் இயங்கும் மேலதிகக் கட்டணச் சேவையின் தேவையும் பயனும் நியாயமாக மதிப்பிடப்பட வேண்டும்.

ஆறு வருடங்களாக இயங்காத சரசாலை, சாவகச்சேரி மத்திய சித்த மருந்தகத்தை மீண்டும் இயங்கச் செய்வதற்காக, பல ஆண்டுகளாக பலர் போராடுகிறார்கள், கடந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் (03.06.2026) ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், அந்தக் காலக்கெடு முடிவடைந்து சுமார் மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், குறித்த மருந்தகம் இயங்க ஆரம்பிக்கப்படவில்லை. இந்நிலையில், 13.10.2026 இல நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மீண்டும் ஒன்றரை மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது.

மக்களுக்கு அத்தியாவசியமான மருத்துவச் சேவையை மீள ஆரம்பிப்பதற்கு தொடர்ச்சியாக கால அவகாசம் வழங்கப்படும் அதேவேளை, ஏற்கனவே இயங்கிவரும் மருத்துவச் சேவையொன்றை உடனடியாக மூடுமாறு வலியுறுத்தப்படுவது சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

ஒரு சேவையை ஆரம்பிப்பதில் இவ்வளவு தாமதமும் நெகிழ்வுத்தன்மையும் காட்டப்படும் நிலையில், மற்றொரு சேவையை நிறுத்துவதில் மட்டும் ஏன் இத்தகைய அவசரம் காட்டப்படுகின்றது?

இந்த செய்தியை பகிரவும்

கருத்துரையிடுக

புதியது பழையவை