சாவகச்சேரி நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த அவசரப் பிரேரணை

 


சாவகச்சேரி நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த அவசரப் பிரேரணை: உறுப்பினர் இரத்தினம் யோகநாதன் முன்வைப்பு!

சாவகச்சேரி நகர்ப்பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்துக்கள் போக்குவரத்து நெரிசல், வாகனத் தரிப்பிடப் பிரச்சினை மற்றும் பாதசாரிகள் எதிர்கொள்ளும் கடும் சிரமங்களுக்குத் தீர்வுகாணும் வகையில் மக்களின் கோரிக்கைக்கமய சாவகச்சேரி நகரசபை இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் திரு. இரத்தினம் யோகநாதன் அவர்களால் ஒரு முக்கிய அவசரப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

கண்டி - யாழ்ப்பாணம் (A9) பிரதான வீதியானது சாவகச்சேரி நகரை ஊடறுத்துச் செல்வதாலும், வீதியின் இருமருங்கிலும் வியாபார நிலையங்கள் அமைந்துள்ளதாலும் இந்நகரில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருவதாக அப்பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிலவும் முக்கிய சிக்கல்கள்:

சாவகச்சேரி நகரசபையின் ஆட்சி அதிகார எல்லைக்குள்
(i). சாவகச்சேரி நகரை ஊடறுத்து கண்டி-யாழ்ப்பாணம் (A9) வீதி செல்வதாலும்
(ii). நகர எல்லைக்குள் மேற்படி (A9) வீதியின் இருமருங்கும் வியாபார நிலையங்கள் அமைந்துள்ளதாலும்
(iii). சாவகச்சேரி நகருக்கு பல்வேறு தேவைகளின் நிமித்தம் வந்து செல்வோர் எதுவிதமான மேற்பார்வையோ கண்காணிப்போ அற்ற நிலையில் மேற்படி A9 வீதியின் இருமருங்கையும் தமது வாகனத் தரிப்பிடமாகப் பயன்படுத்துவதாலும்
(iv). மேற்படி A9 வீதியின் இருமருங்கிலும் நடைபாதை எதுவும் இல்லாமையால் பொதுமக்கள் மேற்படி வீதியின் வெளி வெள்ளைக் கோட்டுக்கு வெளியே உள்ள வீதியின் shoulder பகுதியையே நடமாடித் திரிவதற்குப் பயன்படுத்துவதாலும்
(v). சாவகச்சேரி நகர்ப்பகுதியில் முறையான பொதுவாகனத் தரிப்பிடமொன்று இல்லாமையாலும்
(vi). சாவகச்சேரி நகர்ப்பகுதியில் வீதியோரமாக வாகனங்கள் தரித்து நிறுத்தப்படுவதற்கான நேர ஒழுங்கு மற்றும் வீதியின் எப்பக்கத்தில் வாகனங்கள் தரித்து நிறுத்தப்படலாம் என்ற விதிமுறை எதுவும் நடைமுறையில் இல்லாமையாலும்
பொதுமக்கள்

1. வீதியோரமாக நடமாடித் திரிவதில் மிகுந்த சிரமத்தை எதிர் கொள்கிறார்கள்

2. பாதசாரிக் கடவைகளில் வீதியைக் கடக்க முடியாதவர்களாக உள்ளார்கள்

3. வர்த்தக நிலையங்களுக்குச் சென்று தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாதவர்களாகவும் வர்த்தக நிலையங்களுக்கு வாடிக்கையாளர்கள் செல்லமுடியாததால் வர்த்தக நிலையங்களின் வியாபார நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுவதாலும்

4. வீதிவிபத்துக்கள் ஏற்படுவதற்கான உடனடி அபாய நிலை நிலவுவதாலும்
சாவகச்சேரி நகரசபை இதுவிடயத்தில் உடனடியாகச் செயற்பட்டு சாவகச்சேரி நகர்ப்பகுதியில் பொருத்தமான இடத்தில் பொதுவாகனத் தரிப்பிடம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும்
சாவகச்சேரி நகர்ப்பகுதியில் வீதியோரமாக வாகனங்கள் தரித்து நிறுத்தப்படுவது தொடர்பில் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உரிய இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும்

சாவகச்சேரி நகர்ப்பகுதியில் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வீதியோரமாக வாகனங்கள் தரித்து நிறுத்தப்படும் வகையில் உரிய இடங்கள் ஒதுக்கப்படுவது தொடர்பில் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரூடாக அறிவித்தல் பலகைகளை பொருத்த வேண்டும் என்றும்

சாவகச்சேரி நகர்ப்பகுதியில் வீதியோரமாக வாகனங்கள் தரித்து நிறுத்தப்படுவது தொடர்பில் கட்டணங்கள் விதிக்கப்பட்டு அவற்றை அறவிடவும் வாகனங்களை ஒழுங்குபடுத்தவும் வாகனத் தரிப்பிடக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அந்த பிரேரணை உள்ளது.

முன்வைக்கப்பட்ட தீர்வுகள் மற்றும் கோரிக்கைகள்:

இந்த அவசர நிலையை உடனடியாகக் கருத்திற்கொண்டு சாவகச்சேரி நகரசபை கீழ்க்கண்ட நடவடிக்கைகளைத் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என திரு. இரத்தினம் யோகநாதன் கோரியுள்ளார்:

நகரின் பாதுகாப்பான போக்குவரத்திற்கும், பொதுமக்களின் நலனுக்கும் வர்த்தக நடவடிக்கைகளின் சீரான இயக்கத்திற்கும் இப்பிரேரணையில் உள்ளம்சங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் விபத்துக்களைக் கட்டுப்படுத்தவும் களவுகளை தடுக்கவும் நகர்ப்பகுதியில் கண்காணிப்பு கமெராக்கள் அவசியமாக உள்ளன.
நகர சபை கூட்டாக மக்களின் கோரிக்கையை நிறைவேற்றவேண்டியது அவசியமாகின்றது.
இந்த செய்தியை பகிரவும்

கருத்துரையிடுக

புதியது பழையவை