தென்மராட்சியில் உள்ளக விளையாட்டரங்கு, நீச்சல் தடாகம், பார்வையாளர் அரங்கு அமைக்க அனுமதி – அடுத்த கட்டமாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அங்கீகாரம்!
தென்மராட்சியின் விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தினால் முன்வைக்கப்பட்ட புதிய உள்ளக விளையாட்டரங்கு, நீச்சல் தடாகம் மற்றும் பார்வையாளர் அரங்கு ஆகியவற்றை அமைப்பதற்கான முன்மொழிவுக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகர சபைக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தில் இவ்விளையாட்டு வசதிகளை அமைப்பதற்கான முன்மொழிவு தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தினால் முன்வைக்கப்பட்டிருந்தது.
தென்மராட்சிப் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்குத் தேவையான நவீன விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் போதியளவில் இல்லாத நிலையில், இத்திட்டம் பிரதேசத்தின் நீண்டகால விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கான முக்கிய முயற்சியாகக் கருதப்படுகின்றது.
புதிய விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள்
இத்திட்டத்தின் கீழ்,
- நவீன உள்ளக விளையாட்டரங்கு (Indoor Stadium)
- நீச்சல் தடாகம் (Swimming Pool)
- பார்வையாளர் அரங்கு (Pavilion)
ஆகியவற்றை அமைப்பதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும் கோயிற்குடியிருப்பு லிகோரியார் தேவாலயத்திற்கு அருகாமையில், கடற்கரையை அண்மித்த பகுதியில் ஸ்கேட் போல் விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்கான முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு 40 மில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இவ் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான முன்மொழிவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்குத் தேவையான நிதியை இவ்வருடத்திற்குள் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்துள்ளார்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அங்கீகாரத்திற்காக அடுத்த கட்ட நடவடிக்கை
இன்று (13.10.2026) நடைபெற்ற தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இத்திட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இம்முன்மொழிவுகள் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அடுத்தகட்ட அங்கீகாரத்தைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
தென்மராட்சியில் பல பாடசாலைகளும் விளையாட்டுக் கழகங்களும் இயங்கிவரும் நிலையில், தேசிய மற்றும் மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தயாராகும் வீரர்களுக்கான பயிற்சி வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகியுள்ளது.
இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில், பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் நவீன விளையாட்டு வசதிகளைத் தமது பிரதேசத்திலேயே பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு உருவாகும்.
தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இம்முயற்சி, பிரதேசத்தின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கும் எதிர்காலத் தலைமுறையினரின் திறன் மேம்பாட்டிற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
13 ஒக்டோபர் 2026
