ProGreen Movement இன் 2026 பருவத்திற்கான மரநடுகைச் செயற்பாடு, கைதடியில் நடைபெற்ற “கோமாதா குடிநீர்” திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது, மருது மரக்கன்றுகளும் புங்கை மரக்கன்றுகளும் நடப்பட்டன. பசுமையானதும் ஆரோக்கியமானதுமான சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்கில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. நடப்பட்ட மரக்கன்றுகள் வளர்ச்சியடையும்போது, கேணியைச் சூழவுள்ள பகுதி கால்நடைகளுக்கு நிழலும் ஓய்வும் வழங்கும் பசுமையான இடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நீரருந்த வரும் கால்நடைகளுக்கு வெப்பத்திலிருந்து ஓரளவு பாதுகாப்பளிப்பதுடன், பறவைகள் உள்ளிட்ட சிற்றுயிர்களுக்கும் வாழிட வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியாக இம்மரநடுகை அமைகின்றது.
இம்மரநடுகை நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன், தென்மராட்சி பிரதேச செயலாளர் திரு. F.C. சத்தியசோதி, சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் திரு. பொன்னையா குகதாசன், உப தவிசாளர் திரு. இராமநாதன் யோகேஸ்வரன், ProGreen Movement சார்பாக ந.சஞ்சேயன், பசுந்தேசத்தினர் றும் கேணித் திட்டத்தின் நன்கொடையாளர்கள் ஆகியோர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.
கால்நடைகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்ட கேணித் திட்டத்துடன் இணைந்து இடம்பெற்ற இந்த மரநடுகை, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக அமைந்தது.
மேலும் மரங்கள் நன்கு வளர்வதற்கான பராமரிப்பையும் தொடர்ச்சியாக முன்னெடுப்பது அவசியமாகும். குறிப்பாக, வறட்சிக் காலங்களில் நீர் ஊற்றுதல், கால்நடைகளால் சேதமடையாதவாறு பாதுகாப்பு வேலிகளை அமைத்தல் மற்றும் அவற்றின் வளர்ச்சியைக் கண்காணித்தல் ஆகியவற்றில் சமூகத்தின் பங்களிப்பு முக்கியமானது. கைதடி வீரகத்தி பிள்ளையார் ஆலய நிர்வாகம் அப்பணிகளை மேற்கொள்ளும்.
அரச நிர்வாகத்தினர், உள்ளூராட்சி பிரதிநிதிகள் மற்றும் நன்கொடையாளர்களின் பங்கேற்பு, தென்மராட்சியின் சமூக அபிவிருத்திக்கும் பசுமையான எதிர்காலத்திற்குமான கூட்டுப் பொறுப்பை வெளிப்படுத்தியது.
.png)
