கைதடி அஞ்சலகத்திற்கான நிரந்தரக் கட்டடத்தை அமைப்பதற்கான காணி தேவை தொடர்பான முயற்சிகள் 2000ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் இவ்விடயம் தொடர்ச்சியாக எடுத்துரைக்கப்பட்ட நிலையில், அஞ்சலகக் கட்டடம் அமைப்பதற்கு பொருத்தமான அரச காணி கிடைக்காததுடன், பொதுத் தேவைக்காக தனியார் காணியை வழங்குவதற்கும் எவரும் முன்வராத நிலை காணப்பட்டது.
இந்நிலையில், கைதடியில் நடைபெற்ற சந்திப்பொன்றில், தற்போது அஞ்சலகக் கட்டடம் அமைந்துள்ள காணியின் உரிமையாளரிடம் **மாமனிதர் ந. ரவிராஜ்** அவர்கள், பல ஆண்டுகளாக கைதடி அஞ்சலகத்திற்கான காணியைத் தேடி வருவதாகவும், தனிநபர்களிடமிருந்து பொருத்தமான காணியைப் பெற்றுத் தருவதற்கு ஏதேனும் உதவி செய்ய முடியுமா எனவும் கேட்டிருந்தார்.
அதற்கு காணி உரிமையாளர், பொதுத் தேவைக்காக மற்றவர்களிடம் காணியை நன்கொடையாக வழங்குமாறு தம்மால் கேட்க முடியாது என்றும், ஆனால் தமக்குச் சொந்தமான காணியில் ஒரு பகுதி அஞ்சலகத் தேவைக்கு பொருத்தமானதாக இருந்தால் அதனை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், வேறு பொருத்தமான காணி கிடைக்காத பட்சத்தில் தமது காணியைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும், அதற்கு முன்னர் அஞ்சல் துறையில் வடமாகாணத்திற்குப் பொறுப்பான அதிகாரிகள் நேரடியாக வந்து காணியையும் அதன் அமைவிடத்தையும் பார்வையிட்டு, அது அஞ்சலகக் கட்டடம் அமைப்பதற்கு பொருத்தமானது என உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, **13.07.2005** அன்று வடமாகாணத்திற்கான பிரதி அஞ்சல் மா அதிபர் அலுவலகத்திலிருந்து ந. ரவிராஜ் அவர்களுக்கு அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வக் கடிதத்தில், கைதடி அஞ்சலகத்திற்கான புதிய கட்டடத்தை அமைப்பதற்கு **குறைந்தபட்சம் 40 பேர்ச் காணியை கைதடியில் ஏற்பாடு செய்து தருமாறு** கோரப்பட்டிருந்தது. பின்னர், **07.07.2006** அன்று கைதடி அஞ்சலகக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம், பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை இறுதியில் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டமையுடன் நிறைவுக்கு வந்தது. இக்காணியை கைதடி அஞ்சலத்தின் முன்னாள் அஞ்சல் அதிபர் அமரர் கார்த்திகேசு ஆறுமுகம் நினைவாக அவரது மகன் ஆறுமுகம் சூரியகுமாரன் வழங்கியிருந்தார்.
ந. ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டபின் ஒதுக்கப்பட்ட பணத்துக்கு வேலைகள் ஆரம்பிக்கப்படாமல் இருந்தது. தொடர்ந்து 2020ஆம் ஆண்டு ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களால் அஞ்சல் துறை அதிகாரிகளிடம் **2004ஆம் ஆண்டில் திரு. ஆறுமுகம் சூரியகுமாரன் நிரந்தர அஞ்சலகக் கட்டடம் அமைப்பதற்காக காணியை வழங்கியதாகவும், 2006.07.07 அன்று அடிக்கல் நாட்டப்பட்டதாகவும், அதன்பின்னரும் கட்டடப் பணிகள் நிறைவு பெறவில்லை** எனவும் குறிப்பிட்டு மீள ஆரம்பிக்க கோரியிருந்தார். இதே போல் பல ஆண்டுகளாக பசுந்தேசம், இயற்கையின் நண்பர்கள் அமைப்பினரால் தொடர்ச்சியாக இக் கோரிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
10.06.2025, பசுந்தேசம் அமைப்பின் ஏற்பாட்டில் அளுநருடன் நடைபெற்ற கலந்துரையாடலில், பிரதேசசபை உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோர் கூட்டாக கட்டடம் அமைக்க வேண்டிய கோரிக்கையை கூட்டாக முன்வைத்தனர்.
அதனடிப்படையில் இரண்டாவது தடவையும் அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டி முடிக்கப்பட்ட கைதடி தபால் நிலையம் இன்று திறந்துவைக்கப்படுகின்றது.
Tags:
கைதடி




